“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று”.
பொதுப்பொருள்:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
அறத்தை அடிப்படையாக கொண்டு வாழும் இல்வாழ்க்கை எப்படி ஏனையோரின் பழிப்புக்கு உள்ளாகும் ? இல்வாழ்க்கை என்பது
பல்வேறு அறங்களை உள்ளடக்கியதாகும். அஃதினில்
‘அறத்தின் அடிப்படையில் துறத்தல்’ என்னும் அறமும் அடங்கும்.
கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,சுலோகம்-11ல்
“உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன். என்று பார்த்தனுக்கு உபதேசிக்கிறார்”.
கிருஷ்ணர் சொல்லும் தர்மத்துக்கு முரண்படாத காமம் என்பது உத்தமமான இல்வாழ்க்கை வாழும் தம்பதிகள், அறத்தின் அடிப்படையில் நன்மக்களை பெற்றெடுப்பதிர்க்காக மட்டுமே சங்கமித்துக்கொள்ளும் தாம்பத்தியமேயாகும். இது இல்வாழ்க்கையின் அறன் எனப்பட்டதாகும்.
அவ்வாறு நன்மக்களை பெற்றுக்கொண்ட பின், “அன்னையும் பிதாவுமாகவும்” பெற்றெடுத்த தம்மக்களுக்கு “முன்னால் இருந்து அறியும் தெய்வங்களாகவும்” விளங்குதலே, இல்வாழ்க்கையின் அடுத்த அறனாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதன்பொருட்டு இவ்- இல்வாழ்க்கையின் முதல் அறன்எனப்பட்டதான இத்-தாம்பத்தியத்திலிருந்து, தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ளுதலே, அறத்தின் அடிப்படையில் துறத்தல் என்பதாகும்.
அவ்வையும் ஆத்திச்சுடியில்,
அறத்தின் அடிப்படையில் இத்துறத்தலையே
“காப்பது விரதம்” என்கிறார். மேலும் இத்தகைய
அறமும் விரும்பி மனமொத்து செய்தல் வேண்டும்
என்பத்திற்காகவே ‘அறம் செய விரும்பு’ என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அஃதின்றி அன்னையும் பிதாவுமாக மாறிய பின்னரும் அதற்குரிய அறத்தினை பின்பற்றாமல், பெற்றெடுத்த தம்மக்களுக்கும் முன்மாதிரியான பெற்றோராய் விளங்காமல், இல்வாழ்க்கையின் முதல் நிலையிலேயே காலங்கள் கடந்தும் இருப்பின், அஃது அறன் எனப்படும் இல்வாழ்க்கையாகாது , விரதமாகாது. மாறாக தம்மக்கள் மற்றும் ஏனையோரின் பழிசொல்லுக்கே இத்தகையோர் ஆளாக நேரிடும் என்னும் எச்சரிக்கையாக இக்குறளை வள்ளுவர் பெருமான் உலகிற்கு ஈந்துள்ளார்.
சாய்ராம்


