“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்”
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
வள்ளுவர்பிரான் இங்கு பயன்படுத்திய அடக்கம் மற்றும் அடங்காமை என்னும் இவ்விரு பதங்களும் குணங்களை குறித்தே என்பதாக பொருள் கொளல் வேண்டும்.
அடங்காத குணங்கள் ஆசை,கோபம்,செருக்கு, வெறுப்பு,பகைமை போன்றவைகளாகும். இத்தகைய அடங்காத குணங்களை மட்டுமே எவரெவர் சார்ந்துள்ளனரோ அவர்களை அக்குணங்கள் ஆரிருளில் உய்த்துவிடும். வள்ளுவர் இங்கு ஆரிருள் என்னும் பதத்தை பயன்படுத்தியதன் காரணம் ?
அறிவு என்பது என்றென்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். ஆயீனும் இவ்வறிவு ஆறறிவாய் வெளிப்படும்போதுதான், அதுவும் இம்மானுட யாக்கையில் மட்டுமே அவ்வொளி வெளிப்படும்.
ஏனைய பிறவிகளில் இவ் அறிவொளியால் வெளிபட இயலவே இயலாது, மாறாக மங்கியே இருக்கும். அதன் காரணம் அப்பிறவிகளும் இருள் சூழுவே இருக்கும். எப்பிறவியில் ஆறறிவு ஓரறிவாய் மட்டுமே வெளிப்பட இயலுமோ அங்கு இருளும் ஆரிருளாய் போய்விடும். அதாவது அடங்காத குணங்களை மட்டுமே தம் வாழ்நாள் முழுவதும் சார்ந்து இருக்கும் மனிதர்களை, அக்குணங்கள் அவர்களின் வாழ்நாள் இறுதியில், அவர்கள் அறியாமலேயே …
ஆரிருளில் அதாவது ஆறறிவான அறிவொளி எக்காலத்தும் வெளிப்படவே இயலாத மிக மிக கீழான பிறவிகளில் வலுவில் தள்ளப்பட்டு விடுவார்கள்.
அமரத்துவம் என்பது அருட்ப்ரகாச வள்ளலார் அருளிய “மரணமில்லாப் பெருவாழ்வே” யாகும். இதற்கு இன்றளவும் அமரருள் அமரராய் ஒளியினுள் ஒளியாய், ஒளிர்ந்துகொண்டிருக்கும் வள்ளலாரிடம் குடிகொண்டிருந்த அடக்கம் நிரம்பிய பற்றின்மை,சாந்தம்,பணிவு,தயவு,கருணை போன்ற குணங்களும்,பெற்ற பெருவாழுவுமே… வள்ளுவரின் இக்குறளுக்கும் சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றது.
சாய்ராம்


