“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு“.
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள்.இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ?
1. இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி அலைந்துள்ளது என்பது புலனாகின்றது. அவ்வாறு நாடி நாடிச்சென்ற பிறவிகளில் தாவரங்கள், விலங்குகள், பறப்பன, ஊர்வன போன்ற வடிவங்களும் அடங்கும். ஆறறிவுக்கும் கீழான அப்பிறவிகளில் (அவ்வடிவங்களில்) அதுவரை குடிகொண்டிறிந்த இவ் உயிரினால் தமக்கு ஒரு நிலையான வீட்டினை உருவாக்கி கொள்ள இயலவே இயலாது.
ஒரு வேளை எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர் இவ்வுயிரானது உருவாகவேயில்லையெனின், அல்லது இப்பிறவிக்கு பின்னர் வேறு உடல் தேடி வேறெங்கும் செல்லாதெனின், அதாவது முற்பிறவியும் இல்லை மறுபிறவியும் இல்லையெனின், நிலையான இருப்பிடம் என்னும் இக்கேள்விக்கே இங்கு இடமில்லை!
“மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி”
என்று அருட்பராகாச வள்ளலாரும் இந்நிலைப்பேற்றை அனுபவித்து வர்ணித்துள்ளார்.
“உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே”
என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். அதாவது அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை தம் நிலையான வீடாக (இருப்பிடமாக ) ஆக்கிக்கொள்ள முயலாத, இயலாத உயிர்கள் எவ்வாறு கடலில் அகப்பட்ட கட்டையானது காற்றலை அடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டே இருக்குமோ, அவ்வாறே இவ் உயிர்களும் நிலையான வீடின்றி திரிந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய பெரும்பேறு கிடைக்கப்பெற்றும், தமக்கு ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக்கொள்ள இயலாத, முயலாத உயிர்கள்பொருட்டே, இக்குறளை வள்ளுவர் உலகிற்கு வழங்கியுள்ளார் போலும் !!
சாய்ராம்.


