You Are That!- “True to truth forever”

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு“.
குறள் விளக்கம்:
புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்
சான்றாமை என்பதும் வாய்மை என்பதும் ஒன்றேயாம். அவ்வாறு இருக்க சான்றாமையை கடைபிடித்து வாழும் சான்றோர்களுக்கே பொய்யாமை வேண்டும் என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் ?
சான்றோர்கள் இயல்பாகவே சான்றாமையை தம் வாழ்வினில் கடைபிடித்து வாழ்ந்து வாழ்ந்தாலும், இடர்பாடுகளும் பெரும் சோதனைகளும் நிகழும் தருணத்தில், சிறிது பொய்யுரைத்தால் இத் துன்பங்களிலிருந்து தம்மை காத்துக்கொள்ளலாம் என்னும் நிலை உருவாகினும், சான்றாமையை விட்டு ஒரு போதும் விலகவே மாட்டார்கள். அதன் காரணம் அவர்களது பெருமை மற்ற புற விளக்கால் ஒளிர்வதை விட, பொய்யா விளக்கால் அணையாமல் என்றென்றும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டேயிருக்கும்.
எடுத்துக்காட்டாக : ஹரிச்சந்திர சக்ரவர்த்திக்கு சத்திய சோதனை உருவாகும் முன்னரே வாய்மையை தன் உயிர் மூச்சாக கருதியே வாழ்ந்திருந்தார். அவருக்கு ஏற்பட்ட சத்திய சோதனையின் போது, தனது ராஜ்யத்தை இழந்து, மனைவியை பிரிந்து, மகனை இழந்து , இறுதியில் தன் மனைவியையே ராஜ தண்டனைக்காக சிரச்சேதம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டும் கூட பொய்யாமையை கடைபிடித்ததின் காரணம், அவரது பெருமை பொய்யா விளக்கால் அணையா விளக்காக இன்றளவும் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவேதான் வள்ளுவர் பெருமானும் இப் பொய்யா விளக்கை அனைவருக்குமான பொதுவுடைமை சொல்லாக குறிப்பிடாமல், சான்றோர்களுக்கு மட்டுமே உரித்தான தனியுடைமை சொல்லாக்கி, அவர்களை பெருமை படுத்தியுள்ளார்.
சாய்ராம்

Leave a comment