ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்– வள்ளல் பெருமான்
“கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1100)
பொழிப்பு: கண்களோடு கண்கள் இணைந்து நோக்கால் ஒத்திருந்தால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லை என்பது பொது பொருள். இதை வள்ளல் பெருமான் பாடலுடன் பொருள்படுத்தி பார்க்கலாம்
பொதுவாக இருவர் சந்தித்துக் கொள்ளும் போது அவரவர் மனதினில் தோன்றும் நினைவுகள் வாய்ச் சொற்களாக வெளிபடாது. மாறாக மனம் ஒன்று நினைக்க நாவு ஒன்று பேச என்பதாகத்தான் இருக்கும். அதாவது வள்ளல் பெருமான் பாடியபடி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாத்தான் இருப்பார்கள். இத்தகைய இவ் இருவரின் கண்கள் எந்நிலையிலும் ஒன்றையொன்று சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேதான் இருக்கும். ஏனெனில் ஒருவரின் கண்கள் எப்போதும் உள்ளொன்று உள்ளதை புறத்தில் அப்படியே வெளிப்படுத்தும். மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு புறம்பாக ஒருவரது வாய்ச்சொற்கள் இருப்பின், அவரது கண்கள் மற்றவர் கண்களை நேரடியாக பார்பதை தவிர்த்து அக்கண்களோடு உறவு கலவாமையாகத்தான் இருக்கும்.
மாறாக எவ் இருவரின் (அவர்கள் எவர்களாக இருப்பினும்) எண்ணங்கள் முதலில் ஒன்றிப்போகின்றனவோ, அத்தகைய இருவரின் மனங்கள் தம் நினைவுகளை நாவின் வழியே வாய்ச் சொற்களாக வெளிப்படுவதை தவிர்த்து, இயல்பாகவே அவரவர் கண்களின் நோக்கிலிருந்து வெளிப்படுத்தும். அதாவது உள்ளொன்று உள்ளதை புறம் வழியே அதாவது அவர்களின் வாய் வழியே வெளிப்படுத்தாமல், அவரவர் கண்களின் நோக்கிலிருந்தே வெளிப்படுத்தி, உறவை தம் கண்கள் மூலமாகவே கலந்து கொள்வார்கள்.
உலகியலில் காதல் வயப்பட்ட இருவரின் கண்களில் இருந்து சொற்ப காலத்திற்கு (காதல் உணர்வு ஒன்றியிருக்கும் வரை ) இத்தகைய நோக்கும் திறன் வெளிப்பட்டு உறவுகள் கலக்கலாம். ஆனால் மெய்ப்பொருள் உணர்ந்தோர் கண்களில்,
“என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்“
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

