You Are That!- “A zealous character”

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு“.

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும்.

ஆனால் தற்காலத்தில் அறிவுடையோரே அவ்வறிவின் செயல்பாட்டின் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராயும் ஆகியுள்ளனரே ?

உடம்பு உயிரெடுத்ததோ உயிரும் உடம்பெடுத்ததோ
உடம்பு உயிரெடுத்தபோது உருவம்மது செப்புவீர்
உடம்புயிர் இறந்தபோது உயிர் இற்ப்பதில்லையே
உடம்பு மெய்மறந்து கண்டுணர்ந்து ஞானம் ஒதுமே“.
என்பது சிவவாக்கியர் பாடல்.
இங்கு வள்ளுவர் பயன்படுத்திய இயற்கை என்னும் சொல்லுக்கும் படைப்பின் செயல்பாடு என்று பொருள் கொள்ளாலாம். அது தொன்று தொட்டு இவ்வுலகில் இடைவிடாது இருவேறாய் இருந்து கொண்டிருக்கும், இறந்து இறந்து பிறக்கும் உடலும், இறவாத உயிரும் ஆகும்.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே“.
என்பது திருமூலரின் திருமந்திரச் சொல்.
வள்ளுவரும் இப்பொருளினை விளக்கவே, இருவேறான இயற்கை நிலையில் இயங்கிக் கொண்டிருந்த உடலும் உயிரும், இவ் இயற்கை நிலையினின்று இறையருளால் மாறுபட்டு, உத்தமன் கோவில் கொண்ட உடம்பாக விளங்கி நிற்கும் இத்தன்மையினையே திருவேறு (தெய்வத்தன்மை கொண்டது
என்று குறிப்பிடுகிறார்.
தெள்ளிய ராதலும் வேறு என்பது வள்ளுவர் கொடுக்கும் எச்சரிக்கையாகும். ஏனெனில் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்
நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றி இழுக்கின்றன.” என்கிறார்.
அதாவது திருவேறு என்னும்  உத்தமன் கோவில் கொண்ட உடம்பாக உயர்ந்த போதிலும், கைவறப்பெற்ற சித்திகளில் மயங்கி  இறையருளை மறந்து போனதன் காரணம்,  உலகியல் மாயையால் ஈர்க்கப்பட்டு மீண்டும் பழைய இருவேறான இயற்கையாக , அதாவது ‘உறுபொருளை மறந்த உடம்பு’  என்னும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அநேகர்.
வெகு வெகு சிலரே
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் என்னும் திருமந்திரச் சொல்லுக்கேற்ப, வைராக்கியம் நிரம்பபெற்ற தன்மையில் மாயை வலையில் சிக்காமல், சிவனருளால் தெளிவு பெற்று (அவனருளாலேயே அவன் தாள் வணங்கி) தம் சீவனையே சிவனாக காணும் ஆற்றல் அடையப் பெற்றவர்கள், என்னும் மெய்ப்பொருளை உள்ளடக்கி இக்குறளை உலகிற்கு வழங்கியுள்ளார் பொய்யாமொழிப் புலவர்.
சாய்ராம்.

 

Leave a comment