“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்“.
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே என்பது இக்குறளின்பொதுப்பொருள்.
ஒருவர் தமக்கு மற்றொருவரால் இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து, அவருக்கு நன்மை புரிதல் அல்லது அத்தகைய இன்னல்களை இழைத்தவர் தன் தவற்றுக்கு மனம் வருந்தி அந்த நன்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று.
ஏனெனில் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் பொறாமை என்னும் குணமே, இன்னல்களை இழைக்க தூண்டுகிறது.இத்தகைய இன்னல்களுக்கு ஆளானவரிடமும் இயல்பாகவே பழிவாங்கும் உணர்வும் பொங்கத்தான் செய்யும். ஏனெனில் தீமைகள் தீமைகளாகவே பார்க்கப்படுவதால்.
ஆயின் வள்ளுவர் கூற்று என்னவாயிற்று ?
அதாவது எவரொருவருக்கு தமக்கு எத்துணை முறை தீமைகள் ஏற்படினும்,அத்தீமைகளை தீமைகளாக நோக்காத திறன் உள்ளதோ,
(பொறாமை குணம் அற்றவருக்கே இத்தகைய திறன் வாய்க்கும் )
அத்தகைய ஆற்றல் படைத்தோரிடமிருந்து எதிர்ப்படும் நற்செயல்களே இத் தீமைகள் புரிந்ததோர் மனதினில் அதுவரை குடிகொண்டிருந்த பொறாமையை அகற்றி மாற்றத்தை உருவாக்கும்.
மேலும் அவர்கள் அறியாமலேயே அவர்கள்தம் செயலுக்கு வருந்தி நாணி நல்வழி செல்ல முயல்வார்கள் என்னும் மறை பொருளாக இக்குறளை வள்ளுவர் வழங்கியுள்ளார். நபி பெருமானார் வாழ்வில் நடந்த சம்பவத்தை இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
நபி பெருமானார் நாள்தோறும் நடைப் பயிற்சிக்காகவும் – குளிப்பதற்காகவும் – சில தெருக்களைக் கடந்து செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போதெல்லாம், அவர் புகழ் கண்டு பொறாமையால் மனம் புழுங்கியிருந்த ஒரு மங்கை – மாடியிலிருந்தவாறு குப்பைக் கூடையை அவர் தலையில் கொட்டுவது வழக்கம். அப்படி கொட்டப்பட்ட குப்பையைத் தட்டிவிட்டு, அவர் குளத்திலே மூழ்கி உடலைக் கழுவிக் கொள்வார். அந்தப் பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் – நபிகள் நாயகத்தின் மீது அளவற்ற வெறுப்பு கொண்டவர் என்பதாலும் – அந்தக் குப்பை கொட்டும் திருவிழா தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு நாள் அந்தத் தெருவில் அந்த வீட்டுக்கு அருகிலே நடந்துபோன போது நபிகள் நாயகம் எதிர்பார்த்தவாறு, அவர் தலையில் குப்பை கொட்டப்படவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கிய நபிகள் அடுத்த வீட்டுக்காரர்களிடம், அந்த அம்மையாருக்கு என்ன நேர்ந்தது – ஏன் குப்பை கொட்டவில்லை – என்று வினவினாராம். அந்தப் பெண்மணிக்கு உடல்நலம் இல்லை – என்ற செய்தி கேள்விப்பட்டதும் முகமது நபி விரைந்து அந்த வீட்டின் மாடிக்குச் சென்று அந்தப் பெண்மணியிடம் உடல்நலம் விசாரித்தாராம். அவர் விரைவில் உடல்நலம் பெறவும் உதவினாராம். நாள்தோறும் நபிகளை வெறுத்து குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் மனம் திருந்தியதாம். இஸ்லாத்தின் பெருந்தன்மையை – அதைக் கடைப்பிடிக்கும் நபிகள் நாயகத்தை வியந்து போற்றிய அந்தப் பெண்மணி தன் செயலுக்கு வருந்தி, நாணி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார் என்று ஒரு சம்பவம் உண்டு.
சாய்ராம்


