
Hari Sarvothama! Vayu Jeevothama!
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”.
ஏதிலார் என்னும் பதத்திற்கு அயலார் என்று பொருள். அயலாருடைய குற்றம் என்று வரும் பொழுது அது குற்றம், மற்றும் குற்றம்புரிந்தவன், சாஷி என வகைபடுத்தப்படுகிறது.
அதேபோல் எவனொருவன் “ ஏதிலார் குற்றம்போல் தங்குற்றத்தையும் “ அதாவது தாம் செய்யும் அல்லது செய்த குற்றத்துக்கும் சாஷி உள்ளது என்று உணர்வானாகில்,ஏனெனில் ஒருவரும் அறிகிலார் என்னும் எண்ணமே ஒருவரை மேன்மேலும் குற்றம் செய்ய தூண்டுகின்றது….
அவ்வுணர்வால் நாள்பட நாள்பட ஒரு சிறிதும் குற்றம்புரியாத நிலைக்கு மாற்றப்பட்டு, பரிபூரணத்துவம் எய்துவிடுவான். அத்தகையவர் உடம்பில் குடிகொண்ட சாஷியான,அரசனான மந்திரசொரூபியான, (மன் என்றால் அரசன்,மந்திரம் என்று பொருள்) உயிரினால் எத்தீங்கும் அவனுக்கு விளையாது என்னும் பொருள்பட வள்ளுவர் தம் குறளை முடிக்கிறார்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது அவ்வையின் வாக்கு. அதாவது ஒவ்வொருவரும் செய்யும் நல்வினை மற்றும் தீவினைக்குரிய பலன்களை அளிக்கும் அதிகாரி, அவரவர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் சாஷி சொரூபனான ஸ்ரீ ஹரியேயாகும்.
திருமூல நாயனாரும் தம் திருமந்திரத்தில்,
“கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை; காணுங்கால்
கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே”.
– திருமந்திரம் 2067
நாம் செய்யும் நல்லதும், பொல்லாததுமான செயல்களைக் கவனிக்கும் இறைவன் இல்லாத இடமில்லை. ’அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்’ என்ற உண்மையை நாமறிவதில்லை. உள்ளும் புறமுமாய் உறையும் இறைவன் நம் மனதினில் உள்ள எண்ண ஓட்டத்தினையும், நாம் செய்யும் செயல்களையும் கவனித்து எங்கும் வியாபித்திருக்கிறானென்ற உண்மையினை உணர வேண்டும்.
உணர்ந்தோமானால் பிறர் பொருளைக் களவு செய்து அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றாது. நம் கண்ணுக்குப் புலப்படாத கண்காணி ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்தால், அத்தகைய கள்ளம் செய்வோர்கள் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் ஒழித்துவிடுவார்கள் என்றும் சொல்கிறார் ஞானி திருமூலர்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

