You Are That!- “the first among the attempters”

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை”. குறள் 41

பொதுப்பொருள்:

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின்இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்றதுணையாவான்.
மெய்ப்பொருள்:
இங்கு மூவர்க்கும் என்று வள்ளுவர் பெருமான் சுட்டி காட்டுவதை பிரம்மா,விஷ்ணு,சிவன் என்னும் மூவர்களின் இயல்புடைய தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல் என்பதாக கொள்ளாலாம்.

படைத்தல்:

இல்வாழ்வை தம் இல்லாளுடன் துவங்கும் ஒருவன் நன்மக்களை
உருவாக்க வேண்டும்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்”
என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப தாங்கள் படைக்கப்போகும் தம்மக்களின் முன், தாங்கள் அன்னையும் பிதாவுமாக, அவர்கள்தம் முன்னால் இருந்து அறியப்பெறப்போகும் தெய்வங்கள் என்பதினை நன்கு உணரப்பெற்று, ஒரு உயிரை உருவாக்குதல் இல்லறத்தானின் முதல் கடமையாகும்.

காத்தல்:

அவ்வாறு தம்மை நாடிவந்த இல்லாளையும், அவர்கள தம்மால் படைக்கப்பட்ட மக்கட்செல்வத்தையும், தம்மையும் நல்லமுறையில் பேணிக்காத்துக்கொள்ளல் இல்லறத்தானின் இரண்டாவது கடமையாகும்.


அழித்தல்:


“அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை” என்னும் வள்ளுவரின் வாக்குப்படி அறத்தின் அடிப்படையில் வாழ்ந்து, துறக்க வேண்டியவற்றை துறப்பதின் மூலமாக, ஏழு வகையான குணங்களும் (காமம்,குரோதம்,துவேஷம்,மோகம்,லோபம் மதம், மாத்சர்யம்) சம்ஹாரம் செய்யப்பட, அதன்மூலம் வள்ளுவர் கூறும் “எண்குணத்தான்” என்னும் உயரிய அநுபூதி நிலையினை அடையப்பெறுதலே இல்லறத்தானின் மூன்றாவது கடமையாகும்.


இத்தகைய இயல்பான அநுபூதி நிலையினை அடைபெற்ற இல்லறத்தான் தன்முன்…


படைத்தல், காத்தல், அழித்தல்
என்னும் முப்பெரும் தகுதிகளும் சிரம் தாழ்த்தி பெருமையுடன் ஏற்பதை காணலாம் என்னும் பொருள் படவே வள்ளுவர் இக்குறளை நமக்கு அருளியுள்ளார். மேலும் இத்தகைய இல்லறத்தானை சிறப்பிக்கும் பொருட்டு

“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை”

என்று இவ் அநுபூதி நிலையினை வெவ்வேறு முறைகளில் அடைய முயல்பவர்களுள், இல்லறத்தவர்கள் தலைசிறந்து விளங்குவார்கள் என்னும் குறளையும் வள்ளுவர் பெருமான் வழங்கியுள்ளர்.

“அநுபூதியின் முன் முப்பெரும் தகுதிகளும் சிரம் தாழ்த்தி பெருமையுடன் ஏற்க நான் கண்டேன்” என்பது ஸத்குருவின் அருள்வாக்கு.

வாழ்க வள்ளுவம் 🙏

Leave a comment